கொலைகார ராமதாஸ் கும்பல்.... செம பல்டியோடு விருந்தில் பங்கேற்ற அமைச்சர் சிவி சண்முகம் - அதிருப்தியில் ஆதரவாளர்கள்!
2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனக் கூறியவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். இப்படி அறிவித்த ராமதாஸே தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமாகி பா.ம.கவுக்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த புதுக் கூட்டணிக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.கவினருக்கு விருந்து வைத்துள்ளார் ராமதாஸ். இன்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் வைத்து தடபுடலாக விருந்து நடந்துள்ளது. முதலில் இன்று மதியம் தான் விருந்து நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று மதுரை வந்திருந்தார். தேர்தல் கூட்டணி தொடர்பான விஷயங்களை ஆலோசிப்பதற்காக அமித் ஷாவை சந்தித்தார் ஓபிஎஸ். இதனால் அவரால் மதிய விருந்தில் கலந்துகொள்ள முடியாது என்பதால் விருந்து இரவுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இரவு தொடங்கிய விருந்துக்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினரை வரவேற்க தைலாபுரம் தோட்டம் முன்பு பிரமாண்ட கட் அவுட்கள் அணிவகுத்தன. விருந்தில் அதிமுக சார்பில் எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.பி-க்கள் ஏழுமலை, ராஜேந்திரன், எம்.எல்.ஏ-க்கள் குமரகுரு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்களை ராமதாஸ் குடும்பத்தினர் வாசல் வரை சென்று வரவேற்றனர்.
இந்த விருந்தின் ஹைலைட் அங்கு பரிமாறப்பட்ட உணவுகள் கிடையாது. அதையும் தாண்டி ஒன்று ஹைலைட்டாக நடந்தது. ஆம், யாரும் எதிர்பாராத வகையில் இந்த விருந்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டார் என்பது தான் விருந்தின் ஹைலைட். சிவி சண்முகம் இந்த விருந்தில் கலந்துகொண்டது அதிமுக - பாமக என இருகட்சியினருக்கும் சற்று அதிர்ச்சி தான். காரணம் சிவி சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் என்பவரை பாமகவினர் வெட்டிக்கொலை செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால் பாமக மீது சிவி சண்முகம் கடுமையான கோபத்தில் இருந்தார். பாமக அதிமுகவுடன் இணையக்கூடாது என்று வேலைபார்த்தவர்களில் முக்கியாமானவர்கள் கேசி வீரமணி, சிவி சண்முகம் இருவரும் தான்.
இந்த பகையால் தான் அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தத்தின் போது கூட மற்ற எல்லா அமைச்சர்களும் அங்கு இருந்தபோது சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங். அவர் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இன்றைய விருந்தில் கூட அவர் கண்டிப்பாக கலந்துகொள்ளமாட்டார் என்றே பேச்சு அடிபட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை மீறி அவர் விருந்தில் கலந்துகொண்டார். இதற்கிடையே விருந்தின் போது சிவி சண்முகத்தை ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினராம். இதனால் அவர் உச்சி குளிர்ந்து போய் இருக்கிறார். ஆனால் அவர் விருந்தில் கலந்துகொண்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.