விழுப்புரம் அதிமுக எம்.பி விபத்தில் பலி - ராமதாஸ் வீட்டு விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது சோகம்!
விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டு விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த சோக விபத்து நடந்துள்ளது.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததைக் கொண்டாடும் வகையில் நேற்றிரவு தடபுடல் விருந்து கொடுத்தார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விருந்தில் பங்கேற்ற விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் (வயது 62)இன்று அதிகாலை திண்டிவனத்தில் இருந்து விழுப்புரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
மயிலம் அருகே வேகமாகச் சென்ற கார் நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி சின்னாபின்னமானது. இதில் ராஜேந்திரன் எம்.பி. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கார் டிரைவரும், உதவியாளரும் படுகாயமடைந்தனர். விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.