மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? - காஷ்மீரில் தொற்றியுள்ள புது பதற்றம்!
பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் இந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். தங்களின் விடுமுறையை முடித்துவிட்டு மகிழ்ச்சியாக வீரர்கள் பணிக்கு திரும்பும்போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் முடிந்த அடுத்த இரண்டு நாட்களிலே மேலும் ஒரு தாக்குதல் அதே புல்வாமாவில் நிகழ்ந்தது. தொடர் தாக்குதல்களால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தீவிரவாதிகளை துடைத்தெறிய மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.
இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் காஷ்மீர் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் தற்போது மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுளளது. தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக 10 ஆயிரம் சிஏபிஎப் வீரர்களை காஷ்மீரில் பணியமர்த்த உத்தரவிட்டு ஜம்மு- காஷ்மீர் அரசிற்கு அனுப்பியுள்ளது.
அதில், 45 கம்பெனி சிஆர்பிஎப் படை வீரர்கள், 10 கம்பெனி இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 10 கம்பெனி சஷஸ்த்திர சீமா பல் 35 கம்பெனி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஆகிய படைகளின் வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜம்மு- காஷ்மீர் பகுதிகயில் பாதுகாப்பிற்காக 65 ஆயிரம் சிஏபிஎப் வீரர்கள் பணியில் உள்ள நிலையில் மேலும் 10 ஆயிரம் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.