உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை - கோலி என்ன சொல்கிறார்?
புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கனவே 2007 முதல் இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் தொடரில் பங்கேற்பதில்லை. அனைத்து நாடுகளும் பங்கேற்கும் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் பங்கேற்று வருகின்றன.
தற்போது புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக வரும் மே , ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் சுழல்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார். இந்திய கிரிக்கெட் வாரியமும் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்குமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இதனை ஆட்சேபித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பாகிஸ்தானை களத்தில் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை என்ன என்பன குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார். அதில், ``பயங்கரவாத தாக்குதலில் வீரரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் துணை நிற்போம். இந்திய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை நாங்கள் மதிப்போம்'' என்றார்.