தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது - விஜயகாந்தை எதிர்பார்த்து ஏமாந்த தொண்டர்கள்!
தேமுதிக மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு கொடுக்கலாம் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட தேமுதிகவினர் ஏராளமானோர் இன்று விருப்ப மனுக்களை பெற்றனர். மார்ச் 6-ந் தேதி விருப்ப மனு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சிக்காக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கட்சி அலுவலகம் வருவார் என்று தேமுதிக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பில் குவிந்திருந்தனர். ஆனால் விஜயகாந்த் வராததால் ஏமாற்றமடைந்தனர்.