3-வது அணி இல்லையாம் ..! தேமுதிக சேரப் போவது திமுக கூட்டணியா..? அதிமுக கூட்டணியா..? பிரேமலதா தடாலடி விளக்கம்!
வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக 3 - வது அணி அமைத்துப் போட்டியிடாது என்றும், கூட்டணி சேரப்போவது திமுகவுடனா? அதிமுகவுடனா? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் சேர விரும்பி பாஜகவுடன் பேச்சு நடத்தியது தேமுதிக. பாமகவை விட குறைவான தொகுதிகள் ஒதுக்க முன்வந்ததை ஏற்க மறுத்ததால் கூட்டணி இழுபறியானது.
தொடர்ந்து திருநாவுக்கரசர்,ரஜினி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை உடல் நலம் விசாரிக்கச் சென்ற நிலையில் திமுக கூட்டணியிலும் சேர தேமுதிக தரப்பில் முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு எழுந்தது. மற்றொரு பக்கம் தேமுதிக தரப்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு அரசியல் களம் சூடானது.
இந்நிலையில் இன்று தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை பிரேமலதா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசுகையில், தனித்துப் போட்டியிடும் அளவுக்கு தேமுதிகவுக்கு பலம் உள்ளது. ஆனாலும் 3-வது அணி அமைத்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. எங்கள் பலத்தை அறிந்து உரிய தொகுதிகள் வழங்கும் கூட்டணியில் சேருவது பற்றிய முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்றார்.
பிரேமலதாவின் விளக்கப்படி அதிமுக, திமுக என இரு தரப்பிலும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தேமுதிக தொடர்வதாகத் தெரிகிறது. இதனால் தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்ற பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.