விவசாயிகளுக்கு ரூ. 6000 மோடி திட்டம் ....! ஏழைகளுக்கு ரூ.2000 எடப்பாடி திட்டம்...! ஒரே நாளில் தொடக்கம்-பயனாளிகள் குழப்பமோ குழப்பம்!
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டமும், தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கான சிறப்புத் தொகுப்புத் தொகை ரூ 2000 வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. இதன் பலன் யாருக்கு என்பது தெரியாமல் தமிழகத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் மத்திய அரசும், தமிழக அரசும் போட்டி போட்டுக் கொண்டு இலவசத் திட்டங்களை அறிவித்தன. 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் பணம் தலா 2 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை 3 தவணை களாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
தேர்தலுக்கு முன்பே இந்தத் தொகையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க அவசர, அவசரமாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு உ.பி.மாநிலம் கோரக்பூரில் இன்று பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதே போன்று தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு சிறப்புத் தொகுப்பாக ரூ 2 ஆயிரம் வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்த தினமான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் யார்? என்று கணக்கெடுப்பதில் ஏகக் குளறுபடிகள். இதனால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் என்ற தகவல் பரவி தமிழகம் முழுவதும் ரேசன் கார்டு, வங்கிப்புத்தகங்களுடன் மக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என்று அறிவித்த நிலையில், 2 கோடிப் பேர் தொகையை எதிர் பார்த்துக் கிடக்கின்றனர்.
இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து தமிழக அரசிடம் இருந்தும் தெளிவான விளக்கம் இல்லாமலே திட்டமும் தொடங்கப்பட்டு விட்டதால் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசு ஊழியர்களும் திணறி வருகின்றனர்.