சுவரொட்டி வேண்டாம் யாரையும் சீண்ட வேண்டாம் : கமல்ஹாசன் அறிவுரை
ரசிகர்கள் பிதற்றலான சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம். நாம் யாரையும் தேவையில்லாமல் சாட வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.
இதற்காக ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார் என்றும் கொடி, சின்னத்தையும், தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார் என்று தெரிகிறது.
இதற்கிடையில், சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க சென்னையில் ரசிகர்களை கமல்ஹாசன் சந்தித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், “ரசிகர்களை சந்திப்பது வழக்கமானது என்றாலும், தற்போது அதன் இலக்கு மாறியுள்ளது. இந்த பயணத்தின் நோக்கம், கஜானாவை நோக்கியது அல்ல, மக்களை நோக்கி செல்வது. மக்களை நோக்கிய இந்த பயணம் தொடங்கி 37 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த பயணம் விரைவாகவும் நல்லபடியாகவும் இருந்தாக வேண்டும்.
சாதி என்ன, மதம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது கிடையாது, இனியும் அப்படித்தான் இருக்கும். இனி நீங்கள் எந்த கட்சி என கேட்டு உறுதி செய்து கொள்வோம். சாதி, மதங்களை கடந்த பயணமாக இது இருக்கும். வெற்றியை நோக்கி நாம் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
மக்களை நோக்கிய பயணம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறுகிறேன். ரசிகர்கள் பிதற்றலான சுவரொட்டிகள் எதுவும் ஒட்ட வேண்டாம், கண்ணியம் காக்கப்பட வேண்டும். நாம் யாரையும் தேவையில்லாமல் சாட வேண்டாம், நானும் திருத்திக்கொள்வேன். நமக்கு விரோதிகள் என்பவர்கள் சமூகத்திற்கும் விரோதிகள்தான்” என்றார்.