`தலித் என்பதால் எனக்கு முதல்வர் பதவி மறுப்பு - கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா வேதனை!

தலித் என்பதால் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா குற்றம் சுமத்தியுள்ளார்.

கர்நாடக துணை முதல்வராக இருப்பவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். பல முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கர்நாடக சட்டசபைக்கு தேர்வானவர். காங்கிரஸ் கட்சியிலும், மக்களிடமும் மிகுந்த செல்வாக்கு கொண்டவர். பல்வேறு அமைச்சர் பொறுப்புகளையும் அவர் வகித்து வந்துள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வென்றிருந்தால் இவர் தான் முதல்வர் எனப் பேசப்பட்டது. ஆனால் விதி வசமாக கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், சாதியால் தனக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டது என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் பரமேஸ்வரா.

இதுதொடர்பாக அவர் பேசியுள்ளதில், ``முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு எனக்கு மூன்று முறை வந்தது. ஆனால் காங்கிரஸில் உள்ள தலைவர்கள் அதனை தடுத்தனர். காரணம் நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது தான். என்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தலித் தலைவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியில் இதே நிலை தான். பசவலிங்கப்பா, மல்லிகார்ஜூன கார்கே போன்ற மூத்த தலைவர்களுக்கும் தலித் என்பதால் முதல்வர் பதவி மறுக்கப்பட்டது. தலித் தலைவர்களே முன்னேற விடாமல் சிலர் தடுக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் சிலர் இதை ஒரு வேலையாகவே செய்கின்றனர்.

இந்தமுறை நான் துணை முதல்வர் ஆனபோதுகூட இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டேன். கடைசி நேரத்தில் என்னை துணை முதல்வராக ஆவதை சிலர் தடுக்க முற்பட்டனர். ஆனால் நீண்ட போராட்டத்துக்கு பின்பு ஒருவழியாக இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். அரசியல் ரீதியாக தலித் மக்களை அடக்க பார்க்கிறார்கள்" என்று குற்றம் சுமத்தியுள்ளார். இவரின் குற்றச்சாட்டால் தற்போது கர்நாடக காங்கிரஸில் புதியதாக புயல் கிளம்பியுள்ளது.

More News >>