ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 28-ந் தேதி ஆஜராக வேண்டும் - 6-வது முறையாக ஓபிஎஸ்சுக்கு சம்மன்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்,சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணையை முடித்து விட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்து தர்மயுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் 5 முறை சம்மன் அனுப்பியிருந்தது.ஓ.பி.எஸ். தரப்பில் அவகாசம் கேட்டு மனு செய்ததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 6-வது முறையாக வரும் 28-ந் தேதி ஆணைய விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.