புடவைகள் ஏலம் - இறந்த பிறகும் தொண்டு நிறுவனத்துக்கு உதவிய ஸ்ரீதேவி!
தமிழ் படங்களில் அறிமுகமாகி இந்தி சினிமா வரை சென்று இந்திய அளவில் 50 ஆண்டுகள் முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி துபாய் உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது நெஞ்சுவலியால் பரிதாபமாக மரணமடைந்தார்.
அவர் மறைந்து ஒரு ஆண்டுகள் முடிந்தத்தை அடுத்து நேற்று ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அவரது உறவினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கடந்த பிப்ரவரி 14-ந்தேதியன்று சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள போனி கபூர் இல்லத்தில் ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் ஸ்ரீதேவி பயன்படுத்திய புடவைகளை இணையதளத்தில் ஏலம் விடப்பட்டது. ஸ்ரீதேவி எப்போதும் விரும்பி உடுத்தும் கோட்டா ரக புடவைகள் தான் அவை. சென்னை நிறுவனம் நடத்திய இந்த ஏலம் ரூ.40,000க்கு தொடங்கியது. இறுதியில் 1.30 லட்ச ரூபாய்க்கு ஏலம் முடிந்தது. இந்த ஏலத்தின் மூலமாகக் கிடைத்த தொகையை தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் போனி கபூர். உயிருடன் இருக்கும்போது ஸ்ரீதேவி பலருக்கு உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இறந்தபிறகும் அவர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.