`டி20 போட்டியில் நான் எப்போதும் கிங் தான் - புதிய சாதனை படைத்த ரெய்னா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா. இவருக்கு இந்தியா முழுவதும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால் தமிழகத்தில் இவருக்கு நிறைய ஃபேன் பாலோயர்ஸ் உண்டு. இருப்பினும் சமீபகாலமாக இந்திய அணியில் இடம் பிடிப்பதில் தடுமாறி வருகிறார். பார்ம் இல்லாதது, நிறைய இளம் வீரர்களின் வருகை உள்ளிட்டவைகளால் ரெய்னா தடுமாறி வருகிறார். இதனால் இங்கிலாந்து உலகக்கோப்பையில் இவர் பங்கேற்பது கடினம் தான். இருப்பினும் தற்போது உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார் ரெய்னா.
இன்று டெல்லியில் நடந்த டி20 போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் புதுச்சேரி அணியும் மோதின. இதில் பேட்டிங் செய்த ரெய்னா 12 ரன்கள் தான் எடுத்தார். இருப்பினும் இந்த 12 ரன்கள் எடுத்ததில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது, 12 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றவர் ஆகியுள்ளார் ரெய்னா. இதற்கு முன் எந்த இந்திய வீரரும் இந்த சாதனையை செய்யவில்லை. சுமார் 300 டி20 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை ரெய்னா செய்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்த சாதனைப் பட்டியலில் முதல் இடத்தில் அதிரடி கிறிஸ் கெயிலும், இரண்டாம் இடத்தில் பிரன்டன் மெக்கலமும் உள்ளனர். சர்வதேச அளவில் ரெய்னா இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்திலும், கோலி, ரோஹித் ஆகியோர்கள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளனர். இதேபோல் ரெய்னா இன்று தனது 300வது டி20 போட்டியில் விளையாடினார். இதன்மூலம் 300-வது டி20 போட்டிகளில் விளையாடிய 2-வது இந்திய வீரர் எனும் பெருமையையும் ரெய்னா பெற்றார். இதற்கு முன் தோனி மட்டுமே 300 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல் சிக்ஸர் அடித்ததிலும் இன்று புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இன்றைய போட்டியில் சிக்ஸர் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை ரோஹித் சர்மாவுக்கு பின் ரெய்னா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.