2008லேயே ஜெயலலிதா என்னிடம் சொல்லிவிட்டார்.... - தினகரனை விளாசிய ஓபிஎஸ்!
டிடிவி தினகரனை பற்றி தெரிந்ததால் அவரை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் வியாசர்பாடியில் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசினார் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ். அதில், ``டிடிவி தினகரன் இந்த ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என நினைக்கிறார். ஆனால் உண்மையான தொண்டர்கள் அதிமுக பக்கம் உள்ளனர். குண்டர்கள் தான் அவரிடம் உள்ளனர். தனக்கு கீழ் எல்லாரையும் வைத்து எல்லா அதிகாரமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். 2008ல் அவரை ஜெயலலிதா நீக்கியபோது என்னை அழைத்து, தினகரனுடன் எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறினார். தினகரன் தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து செயல்படுகிறார். தினகரனை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. யாராவது அழைப்பார்கள் எனப் பார்த்தார்.
ஆனால் அவரைப் பற்றி தெரிந்ததால் யாரும் சேர்க்கவில்லை. ஆனால் நம் கூட்டணி இந்தியாவிலேயே இதுவரை இல்லாத மெகா கூட்டணியாக வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நமக்குள் ஏதேனும் மனக்கசப்புகள் இருந்தால், அவற்றை மறந்து வேலைசெய்து, தேர்தலில் வெல்ல வேண்டும். தேமுதிகவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது; இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி இறுதியானவுடன் அனைத்து தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும். அதேபோல் 7பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்தப்படும்" என்று பேசினார்.