புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது!
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார், 10 தினங்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது என்றும், அந்தக் காரின் உரிமையாளரும் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டார் என்று தேசிய பாதுகாப்பு ஏஜன்சி கண்டுபிடித்துள்ளது.
கடந்த 14-ந் தேதி புல்வாமாவில் சிஆர் சி எப் வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பு மீது தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தான். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக செயல்பட்ட பாக்.ஆதரவு ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தீவிரவாதி அடில் அகமது என்பவனும் பலியானான்.
இந்தக் கோரத் தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட கார் பற்றிய தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாருதி எக்கோ வகை கார் தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 4-ந் தேதி தான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஜத் பட் என்பவன் இந்தக் காரை வாங்கியுள்ளான். அவனை புலனாய்வு அமைப்பினர் தேடிய போது அவனும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.