புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி - பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த இந்திய விமானப் படை!
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுவி இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
கடந்த 14-ந் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் இந்தியப் படை வீரர்கள் 40 பேர் பாக் ஆதரவு தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்புத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இந்தியா எச்சரிக்கை விடுத்தும் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு புகழிடம் கொடுத்து வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வந்தது. 2016-ல் பாகிஸ்தானின் யூரி பகுதியில் நடத்திய துல்லிய தாக்குதலைப் போன்ற தாக்குதலை பாகிஸ்தான் ஆக்கிரபிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானங்கள் நடத்தின.
அதிகாலை 3.30 மணிக்கு சீறிப் பாய்ந்த இந்திய விமானப் படை 12 ஜெட் விமானங்கள் பாலகோட், சகோதி,முசாபர்பாத் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி பார்த்து குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் 1000 வெடிகுண்டுகள் வீசப்பட்டது.
துல்லிய தாக்குதலில் தீவிரவாத முகாம்களை சின்னாபின்னமாக்கி அழித்து விட்டு ஜெட் போர் விமானங்கள், பத்திரமாக இந்திய எல்லைக்கு திரும்பியதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போய் உள்ளது. எல்லையைத் தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ராணுவமும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.