தீவிரவாதிகளின் சொர்க்கபுரியான பலா கோட் முகாம் - 300 பேரை தீர்த்துக் கட்டிய இந்திய விமானங்கள்!
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் பலா கோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய முகாமை குண்டு வீசி தகர்த்துள்ளது இந்தியப் படை விமானங்கள். இங்கு மட்டும் 300 -க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் நுழைந்து குண்டு மழை பொழிந்தது. அதிகாலை 3.30 மணிக்கு இந்தியாவின் அதி நவீன மிராஜ் 2000 ரக ஜெட் போர் விமானங்கள் பலா கோட்,முசாபராபாத், சாக்கோட் ஆகிய 3 பகுதிகளில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்தது.
இதில் முக்கியமானது ஆப்கன் எல்லையில் கைபர் பக்துன்வா பகுதியில் அமைந்துள்ள பலா கோட் முகாம் ஆகும். ஜியாஉல் ஹக் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய போது இந்த முகாம் உருவாக்கப்பட்டது. தீவிரவாதிகளின் சொர்க்கபுரி எனக் கூறப்படும் இந்த முகாமில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த முகாமை ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத் தலைவன் மசூத் அசாரின் மைத்துன் மெளலானா யூசுப் அசார் தலைமையேற்று நடத்தி வந்தான்.
இந்த முகாம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.