தயாநிதி மாறனுக்கு நோ சீட்! கூட்டல் கழித்தல் கணக்கு போட்ட ஸ்டாலின்
திமுக-காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்துவிட்டார் ஸ்டாலின். ஆனால் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கான தொகுதிகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
சிபிஎம் கட்சிக்கு இணையான தொகுதிகளை எங்களுக்கும் ஒதுக்க வேண்டும் எனக் குரல் உயர்த்திருக்கிறார் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன். ' சீட் விஷயத்தில் தன்மானத்தை இழந்துவிட மாட்டோம்' எனவும் அவர் உறுதியாகக் கூறிவிட்டார்.
இன்னும் சில தினங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்க இருக்கிறார் ஸ்டாலின். இந்தமுறை 25 தொகுதிகளில் போட்டியிட இருப்பதால், கழக நிர்வாகிகளில் யாருக்கெல்லாம் சீட் என்ற பஞ்சாயத்து இப்போது தொடங்கிவிட்டது.
இதில் தயாநிதி மாறனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என ஸ்டாலினிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தல் என்றாலே மத்திய சென்னையை குறிவைத்துக் களமிறங்கிவிடுவார் தயாநிதி.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஸ்டாலினோடு உரசிக் கொண்டிருக்கிறார்கள் மாறன் சகோதரர்கள். சர்கார் படம், பேட்ட படம் என நடிகர்களை முன்னிறுத்தி அவர்கள் செய்த அரசியல்தான் பிரதான காரணம் என்கிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
கருணாநிதி இருந்த வரையில், முரசொலி மாறனை முன்னிறுத்தி சாதித்துக் கொண்டார் தயாநிதி. இந்தமுறை அப்படி ஏமாறுவதற்கு ஸ்டாலின் தயாராக இல்லை. தவிர, உதயநிதிக்கு எதிராக அவர்கள் நடத்தி வரும் உள்குத்து அரசியலும் ஒரு காரணம் என்கிறார்கள் கோபாலபுரம் குடும்ப கோஷ்டிகள்.
அருள் திலீபன்