`1,000 கிலோ எடை 6 வெடிகுண்டுகள் - பால்கோட் தாக்குதலுக்கு செலவான தொகை எவ்வளவு தெரியுமா?
கடந்த 14-ந் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் இந்தியப் படை வீரர்கள் 40 பேர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பின் குண்டு வெடிப்புத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை ஊடுவிய இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் பால்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதேபோல் சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதனை இந்திய வெளியுறவுத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படி துல்லியமான தாக்குதலை செய்ய இந்தியாவிற்கு உதவியது மிராஜ் 2000 வகை போர் விமானங்கள். இந்த வகையை சேர்ந்த 20 போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தநிலையில் தாக்குதலுக்கு செலவான தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இன்றைய தாக்குதலில் மொத்தம் ஆறு குண்டுகள் தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டன என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆறு வெடிகுண்டுகளும் 1,000 கிலோ எடை கொண்டவை. இந்த வெடிகுண்டுகளுக்கான செலவு 2 - 2.25 கோடி ரூபாய் ஆகும். ஒவ்வொரு குண்டின் மதிப்பும் ரூ.33 - 40 லட்சத்துக்கு மிகாமல் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னரே திட்டமிட்டு இந்த குண்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.