என்னது உயிரிழப்பா.... கட்டடத்துக்குக்கூட ஒன்னும் ஆகல... - இந்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை ஊடுவிய இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த முகாமை மசூத் அசாரின் மைத்துனர் யூசுஃப் அசார் வழிநடத்தி வந்தார் எனவும் தெரிவித்தார். ஆனால், இதைப் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

தாக்குதல் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஃசிப் காஃபூர், ``எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரின் முசாபராபாத் பகுதி வழியாக இந்திய போர்விமானங்கள் நுழைந்தது உண்மை தான். ஆனால் எங்கள் நாட்டு விமான வெளியில் நான்கு மைல்கள் வரைதான் இந்திய விமானப்படை நுழைந்தது. உடனடியாக இந்திய விமானப்படைக்கு எங்கள் விமானப் படை எதிர்வினை ஆற்றியது. நாங்கள் உடனே எதிர்வினையாற்றியதால், அவசர அவசரமாக திறந்தவெளியில், காட்டுப்பகுதிகளில் இந்தியா விமானப்படை வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றுவிட்டது.

இதனால் எந்தக் கட்டுமானத்துக்கும் பாதிப்பும் இல்லை. இந்தியா கூறுவதுபோல் உயிரிழப்பும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார். முன்னதாக இஸ்லாமாபாத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``இந்திய அரசு கற்பனையான விஷயங்களைப் பேசி வருகிறது. தாக்குதலில் தீவிரவாதிகள் உயிரிழந்ததாகக் கூறுவது தவறு" என மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More News >>