மார்ச் 1-ல் குமரி, 6-ந் தேதி சென்னையில் பிரதமர் மோடி பிரச்சாரம் - வழக்கம் போல வைகோ கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் வருகிறார். அரசுத் திட்டங்கள் துவக்க விழாக்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பாஜக பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசுகிறார்.
மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி விட்டார். கூடவே மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
கடந்த மாதம் மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் விழா மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இந்த மாதம் 10-ந் தேதி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை துவக்க விழா மற்றும் பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
தொடர்ந்து வரும் 1-ந் தேதி கன்னியாகுமரிக்கும், 6-ந் தேதி சென்னைக்கும் பிரதமர் மோடி வருகிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மத்திய பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்க மறுத்துள்ள வைகோ, தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியே தீருவோம் என்று அறிவித்துள்ளார்.