காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்!
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப் படை நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டு ராணுவமும், விமானப் படையும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் விமானங்கள் காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து குண்டு மழை பொழிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பதிலுக்கு இந்தியப் படை விமானங்களும் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டு ஸ்ரீநகர் அருகே வயல்வெளியில் விழுந்து தீப்பிபித்தது.
பாராசூட்டில் குதித்த பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப் படையின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தி இந்திய விமானி ஒருவரை சிறைப் பிடித்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் எல்லையில் உச்சக்கட்டபதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே இந்திய விமானப்படையின் மிக் ரக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் இரு பைலட்டுகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஜம்மு, ஸ்ரீநகரில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.