இந்தியா - பாகிஸ்தான் போர் மூளுமா..? உஷார் நிலையில் இருக்க படைகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து அந்நாட்டு போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் மூளுமா? என்ற பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பல இடங்களில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொடர்ந்து இன்று காலையில் பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி வந்து குண்டு மழை பொழிய, பதிலுக்கு இந்திய விமானங்கள் விரட்டியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. இதனால் இரு நாடுகளின் விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவலும் வெளியாக பதற்றம் அதிகரித்துள்ளது.

இன்று காலை முதல் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், ரா, ஐ.பி உளவுப் பிரிவுகளின் தலைவர்கள் , முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை முடிவில், எல்லையில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது

More News >>