பாகிஸ்தான் பிடியில் சிக்கிய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது?ஜெனிவா ஒப்பந்தம் கூறுவது என்ன?
பாகிஸ்தான் நாட்டின் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானி அபிநந்தன் நாடு திரும்புவது எப்போது? என்ற பெரும் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் அதற்கான முயற்சிகளில் மத்திய அரசும் தீவிரம் காட்டியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தப்படி, அபிநந்தனை துன்புறுத்தக்கூடாது என்று இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். முதலில் முகத்தில் ரத்தக் காயங்களுடன் கண்களை கட்டிய நிலையில் அபிநந்தனை காட்டியது பாகிஸ்தான். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கையில் டீ கோப்பையுடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் அபிநந்தன் உரையாடும் வீடியோவை வெளியிட்டு சமாளித்துள்ளது பாகிஸ்தான்.
1949-ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் போர்க் கைதிகள் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தப்படி, பிடிபடும் வேற்று நாட்டுப்படை வீரர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் கூடாது. பெயர், முகவரி, அடையாளம், பணி விபரம் மட்டுமே கேட்க வேண்டும் என்றும், தண்டனை எதுவும் வழங்காமல், கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜெனிவா ஒப்பந்தம் கூறுகிறது.
கடந்த 1999 கார்கில் போரின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கிக் கொண்ட இந்தியப் படை விமானி நாச்சி கோட்டா கடும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த 8 நாட்களுக்குப் பின் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார். தற்போது சென்னையைச் சேர்ந்த அபிநந்தனை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மத்திய அரசும் அபிந்தனை திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதால், விரைவில் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்றே தெரிகிறது.