இந்தியாவுக்கென்று வருகிறது பிரத்யேக டொமைன் சர்வர்
இணைய பெயர் முகவரி பொது வழங்கி என்னும் டிஎன்எஸ் சர்வரை இந்தியாவில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தகவல் மையம் (NIC))முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது. இன்னும் நான்கு முதல் ஆறு மாத காலத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"பெரிய நிறுவனங்கள் தமக்கென்று சொந்தமாக டிஎன்எஸ் என்னும் இணைய பெயர் முகவரி வழங்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சிறிய அளவிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உதவுவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். அரசு டிஎன்எஸ் கொண்டு வரப்படுவதன் மூலம் தீமைபயக்கும் இணையதளங்களை பார்ப்பதை தடுக்க முடியும். போலி செய்திகள் மற்றும் குழந்தைகளை தவறான நோக்கத்தோடு சித்திரிக்கும் இணையதளங்களை முடக்குவதற்கு வேறு பல வழிகள் உள்ள நிலையில் பயனர்கள் ஊறுவிளைவிக்கக்கூடிய இணையதளங்களுக்குள் செல்லாமல் பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது," என்று தகவல் தொழில்நுட்ப துறையினர் கூறுகின்றனர்.
டிஎன்எஸ் என்பது இணையத்தின் பெயர் அட்டவணை போன்றதாகும். மக்கள் எளிதாக நினைவில் வைக்கக்கூடிய இணையதளங்களின் பெயர்களை இணைய நெறிமுறை முகவரி (IP addresses) களாக மாற்றி கணினிகளிடையே இணைப்பை டிஎன்எஸ் ஏற்படுத்துகிறது. இணைய பெயர் முகவரி பொது வழங்கி என்னும் டிஎன்எஸ் சரியாக இயங்காவிட்டாலோ அல்லது மெதுவாக இயங்கினாலோ பயனர்கள் தேவையான இணையதளத்தை பார்வையிட இயலாது.
இந்தியாவில் டிஎன்எஸ் அமைக்கப்படுவதன் மூலமாக இந்திய பயனர்களின் தகவல் இந்தியாவிலேயே சேமித்து வைக்கப்படும். பொது வழங்கியை பயன்படுத்தும் பட்சத்தில் பயனர்களின் தரவுகளை மற்றவர்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.இந்திய பயனர்கள் அனைவரும் இந்திய அரசு ஏற்பாடு செய்ய இருக்கும் டிஎன்எஸ்க்கு மாற வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் விரும்பினால் தாராளமாக இந்திய இணைய பெயர் முகவரி பொது வழங்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.