பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பொதுக் கூட்டம் திடீர் ரத்து!

நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அரசு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்றும், பாஜக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரியில் அரசுவிழா மற்றும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமாக இரு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிலையில் பிரதமரின் பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள் ளது. நாளை குமரியில் அரசு விழாவில் மட்டும் பங்கேற்கும் பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பார் என்றும், பாஜக பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் போர்ப் பதற்றம் நிலவும் வேளையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் பாஜக பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

More News >>