வந்தா வரட்டும்...! வராட்டா போகட்டும்...!தேமுதிகவுக்கான கதவை சாத்துகிறதா திமுக?
திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் டிமாண்டுகளால் திமுக தரப்பு எரிச்சலில் உள்ளதாகவும், தேமுதிக வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும் என்று அக்கட்சிக்கான கூட்டணிக் கதவை சாத்திவிட திமுக தயாராகிவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் முதலில் அதிமுக, பாஜக வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது தேமுதிக. அக்கூட்டணியில் பாமகவுக்கு நிகரான தொகுதிகளை எதிர்பார்த்தது தேமுதிக. ஆனால் 3 அல்லது 4 சீட் தான் என்று அதிமுக கறார் காட்ட கூட்டணிப் பேச்சு இழுபறியானது.
இந்நிலையில் தான் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட திமுக தரப்பு முயற்சிகளை மேற்கொண்டது. விஜயகாந்தை உடல் நலம் விசாரிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று வந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சும் விறுவிறுப்பானது.
விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷூம், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ரகசியமாக சந்தித்து, தேமுதிகவுக்கு 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் என்ற அளவில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும், இன்றைக்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
திமுக கூட்டணிக்குள் தேமுதிக செல்லப் போகிறது என்ற தகவலால் பதறிப் போன அதிமுக தரப்பு மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த முறை 5 சீட் என அதிமுக உறுதி கொடுக்க தேமுதிக எந்தப் பக்கம் சாய்வது என இரு பக்கமும் பேரம் நடத்தி இழுத்துக் கொண்டே சென்றுள்ளது.
தேமுதிகவின் இந்த நிலைப்பாட்டால் எரிச்சலடைந்த திமுக தரப்பு வந்தா வரட்டும்.... வராட்டி போகட்டும்.. என்று தேமுதிகவுக்கான கதவைச் சாத்தத் தயாராகி விட்டதாம். தொடர்ந்து பிற கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து நாளை மறுநாள் கூட்டணி தொகுதி உடன்பாடு இறுதி முடிவை அறிவிக்க திமுக தரப்பு தயாராகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.