`கடுமையாக தாக்கினர் இருந்தும் அதனை அழித்தார் - பாக். ராணுவத்திடம் கைதாகும் முன் அபிநந்தன் செய்த வீரதீர செயல்!
பாகிஸ்தான் ராணுவத்திடம் கைது ஆவதற்கு முன்பு விமானி அபிநந்தன் செய்த இரண்டு வீரதீரமிக்க காரியங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
பால்கோட் தாக்குதலை அடுத்து நேற்று பாகிஸ்தான் விமானப்படைக்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே சண்டை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் இந்திய வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதேபோல் இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லையோரக் கிராமத்தில் கீழே விழுந்தது. அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. தொடர்ந்து அபிநந்தன் பேசுவது போன்ற வீடியோ காட்சியை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டது.
இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் கைது ஆவதுக்கு முன்பு செய்த இரண்டு காரியங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அவர் கீழே விழும்போது அவரை நேரில் பார்த்த பாகிஸ்தானிய இளைஞர்கள் இது குறித்து அந்நாட்டு ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளனர். அதில், கூறப்பட்டுள்ளதாவது, ``நேற்று காலை எங்கள் கிராமத்தில் கேட்ட வெடிகுண்டு சத்தத்தை கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது விமானம் ஒன்று வெடித்து சிதறி கீழே விழுந்தது. அந்த விமானத்தில் இருந்து சிறிது நேரத்தில் பாராசூட் மூலம் ஒருவர் கீழே விழுந்தார்.
கீழே விழுந்ததும் ஓடி வந்து கிராமத்தில் இருந்த இளைஞர்களிடம் தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி இது இந்தியாவா பாகிஸ்தானா எனக் கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருத்தர் இந்தியா எனப் பதில் கூற உடனடியாக அந்த விமானி இந்தியாவில் எந்தப் பகுதி எனக் கேட்டார். தொடர்ந்து தண்ணீர் அவர் கேட்க, அவர் இந்திய விமானி என்பதை புரிந்துகொண்டோம். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் விமானியை கற்களால் தாக்க தொடங்கினர்.
உடனே தான் வைத்திருந்த துப்பாக்கி மூலம் வானை நோக்கி விமானி சுட அவர் அருகில் யாரும் போக பயந்தனர். பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிய விமானி, அருகில் உள்ள குளத்துக்கு சென்று தான் வைத்திருந்த ஆவணங்கள் குளத்து நீரில் மூழ்கடிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் மீண்டும் அவரை சரமாரியாக தாக்கினர். இருப்பினும் சிறிது நிமிடங்களிலேயே ராணுவத்தினர் அங்கு வந்து அவரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், ராணுவத்தினர் வரும் முன்பு அங்கிருந்த பொதுமக்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார்" எனக் கூறியுள்ளனர்.