`10 ஆயிரம் ரன்கள் 500 சிக்ஸர்கள் - ஓய்வு அறிவிப்பை கைவிடுவாரா கிறிஸ் கெய்ல்!

`கிரிக்கெட் உலகின் அரக்கன்', ‘சிக்ஸ் மெஸின்' என அறியப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் வரும் உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை வருத்தமடைய வைத்தார். ஓய்வுக்கு அவர் முன்வைத்த காரணங்கள் வயது 40ஐ எட்டுவதும், உடல் ஒத்துழைக்க மறுப்பதும் தான். ஆனால் இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கெய்ல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடர் முழுவதுமே கெய்ல் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். நேற்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தார். நேற்று 419 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல் தனது அசுர ஆட்டத்தால் மிரள வைத்தார். நேற்று 55 பந்தில் சதத்தை எடுத்ததுடன் . 88-வது ரன்னை தொட்ட போது அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்த எடுத்த 2-வது வெஸ்ட்இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் கெய்ல்.

மேலும் 97 பந்துகளில் 11 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்தார். போதாக்குறைக்கு நேற்றைய ஆட்டத்தில் 14 சிக்சர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச போட்டியில் 500 சிக்சர்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் கெய்ல் உருவாக்கினார். இதுவரை டெஸ்ட்டில் 98, ஒருநாள் போட்டியில் 305, டி20 போட்டிகளில் 103 சிக்ஸர்கள் என மூன்றிலும் சேர்த்து 506 சிக்சர்கள் விளாசி உள்ளார். இப்படி விளையாடி விட்டு ஓய்வு அறிவித்தது ஏன் என போட்டி முடிந்த பிறகு கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த கெய்ல், ``நிறைய டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு தான் இந்த ஒரு நாள் தொடருக்கு வந்தேன். முதலில் ஒருநாள் போட்டிகளுக்கு உடல் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் தற்போது ஒருநாள் போட்டிக்கு ஏற்றவாறு உடல் மாறிவிட்டது. இன்னும் நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை மேலும் மெருகேற்றிவிட்டேன் என்றால் இன்னும் கொஞ்ச காலத்துக்கு எனது ஆட்டத்தை நீங்கள் பார்க்கலாம். எல்லாம் விரைவில் மாறும் என நம்புகிறேன். இரண்டு மாதங்களில் முழு ஃபிட் நிலைக்கு மாறுவேன். எனக்கு 40 வயதை நெருங்கிவிட்டது. அதனாலேயே ஓய்வை அறிவித்தேன். ஆனால் சமீப ஆட்டங்கள் அந்த எண்ணத்தை மாற்ற வைத்துள்ளன. எனவே ஓய்வு அறிவிப்பை கைவிடலாமா என நினைக்கிறேன். பார்ப்போம், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் செல்வோம்" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் ஒருநாள் போட்டிகளில் இன்னும் சிறிது காலம் விளையாடுவர் எனக் கூறப்படுகிறது.

More News >>