1000 சி பஞ்சாயத்தால் ஓரம் கட்டப்பட்ட வடமாவட்ட பிரமுகர்! தொடர் பஞ்சாயத்தால் கொதிக்கும் குடும்பம்!!
திராவிடக் கட்சிகளின் கொள்கைகளை இன்னமும் காப்பாற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் அந்தக் கட்சியில், கடந்த சில மாதங்களாக நடந்து வரும் பணப் புகைச்சல் உச்சத்தை எட்டியிருக்கிறது. தொழிலபதிபர் ஒருவரை நம்பி பெரும் தொகையை இழந்ததுதான் பின்னணி காரணம் என்கிறார்கள் அக்கட்சியின் மூத்தவர்கள்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பிரதான கட்சிகள், தங்களின் தனிப்பட்ட கஜானாவை வளர்த்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபடுவார்கள். இதற்காக கட்சி நிதி என்ற கேட்டகிரியை உருவாக்கி வைப்பார்கள்.
அதுவும் கார்டன் கணக்கா...கோபாலபுரம் கணக்கா என்பதைப் பற்றியெல்லாம் நாம் பேசப் போவது இல்லை. ஆனால் இந்த மறைமுக வருவாயைப் பெருக்கிக் கொடுக்கும் அசைண்மென்டுகளை அமைச்சர்களிடம் கொடுப்பார்கள்.
அரசு ஒப்பந்தம், பணிமாறுதல், பதவி உயர்வு எனப் பல வகைகளில் பணம் கொட்டிக் கொண்டே இருக்கும். இந்தக் காமதேனுவின் மடியை அறுப்பதற்கு எந்தக் கட்சிகளும் தயாராக இல்லை.
அந்த வகையில் வந்த பணத்தை தன்னுடைய அறக்கட்டளை ஒன்றில் முதலீடு செய்து வைத்திருக்கிறது அந்தக் கட்சி. இதன் பரிவர்த்தனைகளை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் கவனித்து வருகிறார்.
அந்த நபர் சொல்வதுதான் கணக்கு என்பதால், அந்தக் கட்சியின் குடும்பமும் அந்தப் பிரமுகர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது.
இதையே அடிப்படையாகக் கொண்டு, பல வகைகளில் நிதியை முதலீடு செய்தார் அந்தப் பிரமுகர்.
அந்த வகையில் தொழிலபதிபர் ஒருவருக்கு 1000 சி அளவுக்குப் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தார். அவர் மூலமாக மாதம்தோறும் பணப்புழக்கம் அதிகரித்தபடியே இருந்தது.
இந்தப் பரிவர்த்தனையைப் பற்றி அந்தத் தொழிலதிபரின் குடும்பமும் அறிந்து வைத்திருக்கவில்லை. இந்தநிலையில் திடீரென மரணத்தைத் தழுவிவிட்டார் அந்தத் தொழிலதிபர்.
இதனால் அவரிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை யாரிடம் வசூல் செய்வது எனத் தெரியாமல் அந்த வடக்கு மாவட்ட பிரமுகர் அதிர்ச்சியில் இருக்கிறார். ஆனால் கட்சிக்குத் தொடர்புடைய குடும்பமோ, உன்னை நம்பித்தான் பணம் கொடுத்தோம். நீதான் அதற்கு பொறுப்பு எனத் தள்ளிவிட்டார்கள்.
இதன் காரணமாக சில வாரங்களாகக் கட்சித் தலைவருடன் அந்த பிரமுகர் பயணிப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாம்.
அருள் திலீபன்