ராஜ்யசபா சீட்டோடு 200 சி! அதிமுகவுக்கு ஓகே சொன்ன தேமுதிக!!

அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக வருவது உறுதியாகிவிட்டது. இதற்காக பிரேமலதா, சுதீஷ் வைத்த அனைத்து டிமாண்டுகளை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் உள்விவரம் அறிந்த கட்சிப் பிரமுகர்கள்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் பாமக, பாஜக ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்துவிட்டன. தேமுதிக வைத்த கோரிக்கைகளுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி செவிசாய்க்காமல் இருந்தார்.

இதனால் திமுக தரப்பில் பேரம் பேசும் வேலைகளைத் தொடங்கினார் பிரேமலதா. அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை திமுக தரப்பு நிராகரித்துவிட்டதால், அதிமுக பக்கம் சரணாகதி அடைந்துள்ளனர்.

டெல்லியில் இருந்தும் அதிமுகவுக்குப் பிரஷர் அதிகரித்ததால், சுதீஷுடன் பேச்சுவார்த்தையை நடத்தினர் எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்கள்.

முடிவில், 4 சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா சீட் என்ற அளவில் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனாலும் 5 சீட்டுகளாக ஒதுக்க வேண்டும் எனவும் தேமுதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.

இதற்கும் எடப்பாடி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவே சொல்கின்றனர் தேமுதிக தரப்பில். இதைப் பற்றிப் பேசும் அதிமுகவினர், எம்.பி சீட்டுகளின் எண்ணிக்கையை விட பணத்தைப் பற்றித்தான் பிரேமலதா அதிகம் பேசினார்.

பாமகவுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதே அளவுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டனர். தொகுதிகளுக்கேற்ப வைட்டமின் ப வை ஒதுக்குகிறோம் எனக் கூறித்தான் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

200 சி வரையில் தேமுதிகவுக்குக் கொடுக்க இருக்கிறது அதிமுக. இதனால் அதிக உற்சாகத்தில் மிதக்கிறார் பிரேமலதா. திமுகவைக் காரணம் காட்டியே அதிமுகவிடம் சாதித்துவிட்டார் பிரேமலதா எனக் குடும்ப கோஷ்டிகள் உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.

எழில் பிரதீபன்

More News >>