பத்மாவத் ரீலீஸ் ஆவது உறுதி - எத்தனை முறை வந்தாலும் தடை விதிக்க முடியாது: நீதிமன்றம்

எத்தனை முறை வந்தாலும், ‘பத்மாவத்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, சாஹித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்மாவத்’ திரைப்படம், வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளது. இப்படம் ‘பத்மாவதி’ என்ற பெயரில் டிசம்பர் மாதமே வெளியாவதாக இருந்தது.

ஆனால், படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்த ரிக்கப்பட்டிருப்பதாக கூறி, அகில பாரத பிராமணர் சபா, ராஜ்புத் கர்னி சேனா, சத்ரிய சமாஜ் உள்ளிட்ட சாதிய அமைப்புகளும், பாஜக, விஎச்பி உள்ளிட்ட மதவாத அமைப்புக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த தால் அப்போது படம் வெளியாகவில்லை.

தற்போது தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கேற்ப, பல காட்சிகள் வெட்டப்பட்டும், திருத்தியமைக்கப்பட்டும், ‘பத்மாவத்’ என்றபெயர் மாற்றத்துடன், ஜனவரி 25-ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. சட்டம் - ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி பாஜக ஆளும் 4 மாநில அரசுகள் ‘பத்மாவத்’ படத்திற்கு தடைவிதித்திருந்த நிலையில், அந்த தடையை ஜனவரி 18-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நீக்கியது.

“ஒரு படத்தை பார்க்கவே வேண்டாம் என மக்கள் முடியும் செய்யலாம்; ஆனால், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படக்கூடும் என்பதைக் காரணமாகக் கூறி, மாநில அரசுகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி படத்துக்கு தடை விதிக்க முடியாது” என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது உத்தரவில் தெளிவுபடுத்தி இருந்தார்.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கூறி, பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. பத்மாவத் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமையன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, “நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றியமைக்க வாய்ப்பில்லை” என்று கூறிவிட்ட நீதிபதிகள் தங்களின் முந்தைய உத்தரவை உறுதிப்படுத்தினர்.

“படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மக்களிடம் தான் பிரச்சாரம் செய்ய வேண்டுமே தவிர சட்டம் - ஒழுங்கை தங்கள் கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், “மாநில அரசுகள் முதலில் நீதி மன்றத்தின் உத்தரவுகளை மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

இதனால் ஜனவரி 25-ஆம் தேதி ‘பத்மாவத்’ திரைக்கு வருவது உறுதி யாகி இருக்கிறது. ஆனால், தற்போதே உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில், பத்மாவத் படத்திற்கு எதிராக வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

More News >>