`புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன் - எல்கேஜி படம் குறித்து நெகிழ்ந்த நாஞ்சில் சம்பத்!
ஜெயலலிதா மறைந்தபிறகு சசிகலா, தினகரன் பக்கம் இருந்த நாஞ்சில் சம்பத் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். இருப்பினும் வலைதளங்களில், தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் கிரேஸ் கொஞ்சம்கூட குறையவில்லை. தீவிர அரசியலில் இருந்து சம்பத் ஒதுங்கி இருந்தாலும், அவர் குறித்த மீம்ஸ்கள் இன்றளவும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதால் வறுமையின் பிடியில் தவித்து வந்தவருக்கு சினிமா வாய்ப்புகள் கைகொடுத்து வருகின்றன. ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் நடிப்பு பேசப்பட தற்போது நான்கு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அதில், ``சினிமாவில் இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. ஆசைப்பட்டதும் இல்லை. ஆர்.ஜே பாலாஜி என்னிடம் வந்து இந்தப் படத்தில் நடிக்கிறீங்களானு என்னைப் பார்த்து கேட்டதும், 'எனக்கு நடிக்கத் தெரியும்'னு நினைக்கிறீங்களா'னு தான் நான் கேட்டேன்.எனக்கு நண்பர்கள் அவ்வளவாக கிடையாது. யாரிடமும் நெருங்கி பழகியதும் இல்லை. அதிகாலை ஐந்து மணிக்கு தியேட்டரில் இந்தப் படம் பார்த்துட்டு வெளிய வரும்போது, புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன்.
அதேபோல் பட ரிலீஸுக்குப் பிறகு ஊருக்குப் போகும்போது அங்கு கிடைத்த வரவேற்பு எனக்கு அழுகையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் நடித்ததுக்கு பிறகு நான் கொஞ்சம் உயரமாக வளர்ந்துவிட்ட மாதிரி உணர்கிறேன். எங்கு சென்றாலும் மக்கள் செல்ஃபீ எடுக்க வருகிறார்கள். இனிமேல் அந்த எண்ணிக்கை கூடும். என்னுடைய மகன் ஆர்.ஜே பாலாஜியின் வளர்ச்சிக்கு என்னால் உதவ முடியாது. ஆனால், அந்த வளர்ச்சியைப் பார்த்து என் அளவுக்கு வேறு யாராலும் பெருமைப்பட முடியாது" என நெகிழ்ச்சியாக பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய ஆர்.ஜே பாலாஜி, ``இந்தப் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நாஞ்சில் சம்பத் சார் என் அப்பா தான். கடந்த 40 வருடங்களாக அவரை பற்றி இருந்ததை இந்தப் படம் மாற்றியுள்ளது.ரொம்ப நல்ல மனிதரை இத்தனை நாளாக தவறாக புரிந்துவைத்துள்ளோம். இனி அவர் எப்படிப்பட்டவர் என்று இந்த உலகத்துக்கு தெரிந்துவிட்டது. நான்கு படங்களில் தற்போது நடிக்க உள்ளார். இன்னும் நிறைய படங்களில் அவர் நடிக்க வேண்டும். இத்தனை நாள் சம்பாதிக்காததை இனிமேல் அவர் சம்பாதிக்க வேண்டும்" எனக் கூறினார்.