பேருந்து கட்டண உயர்வு: போராட்ட களத்தில் மாணவர்கள் படை!
தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டக் களத்தில் குதித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. கணிசமான கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு திடீரென அருகிலுள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
அதே போன்று கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசின் அநியாய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், ஆண்டுக்கு ஒரு முறையும் பேருந்து கட்டணத்தை உயர்த்திக் கொள்வோம் என்கிற அரசின் முடிவைக் கண்டித்தும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.