`ஆதி என் குடும்பத்தில் ஒருவர் - மேடையில் நெகிழ்ந்த சுந்தர்.சி!
‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகத்தியிலேயே அமர்க்களமாக என்ட்ரி கொடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிக லாபம் சம்பாரித்தது. இதனை தயாரித்து இருந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இதே சுந்தர் சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி `நட்பே துணை' படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு. ஹாக்கி விளையாட்டையும், கல்லூரி வாழ்க்கையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அனகா நடிக்கிறார். இவர்கள் தவிர கரு.பழனியப்பன், பாண்டியராஜன், கௌசல்யா, பிளாக் ஷிப் குழுவினர் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி நேற்று வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, ``நான் இண்டர்நெட்டில் பார்த்து ரசித்த நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். விக்னேஷ், பிஜிலி ரமேஷ், தங்கதுரை, கோவை ராஜ்மோகன் சார் என நிறைய பேர் இருக்காங்க. கோயம்புத்தூரில் இருந்து அந்த காலத்தில் பாக்யராஜ் சார், சத்யராஜ் சார் வந்தாங்க. அதன் பிறகு மஞ்சள் பையை தூக்கிக் கொண்டு நான் வந்தேன். எனக்கு பின்னாடி ஆதி வந்தார். எங்களை எல்லாம் விழுங்கி சாப்பிடுவது போன்று எருமசாணி விஜய் வந்திருக்கிறார்.
நான் விஜய்யின் தீவிர ரசிகன். எருமசாணி பார்த்து பலமுறை ரசித்து இருக்கிறேன். தமிழ் சினிமாவில் காமெடிக்கு நல்ல இடம் இருக்கிறது. கொஞ்ச நாளைக்காவது காமெடியனாக நடித்து பணம் சம்பாதியுங்கள். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கலாம். இயக்குநராக என் படங்களில் கருத்து சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுதுபோக்கை மட்டுமே மக்கள் எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் 'அன்பே சிவம்' மாதிரி ரிசல்ட் தான் கிடைக்கிறது. 'நட்பே துணை' கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்லதொரு பாசிட்டிவ் மூடு இருந்தது. ஹிப்ஹாப் தமிழா ஆதி தற்போது என் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டார். அவருடைய வெற்றி எனக்கு ரொம்ப முக்கியம். 'மீசைய முறுக்கு' படம் சரியாக ஓடவில்லை என்றால், உடனடியாக ஆதியை வைத்து மீண்டும் ஒரு படம் தொடங்க வேண்டும் என்று குஷ்புவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், ஆண்டவன் புண்ணியத்தில் படமோ ஹிட்டாகிவிட்டது" என்றார்.