72 மணி நேரத்துக்கு பிறகு தாய் மண்ணில் அபிநந்தன் - எல்லையில் உற்சாக வரவேற்பு!
பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன்னர் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் வைத்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை விமானப் படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்க அபி நந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார். இந்தியா முழுவதும் இம்ரான்கானின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லாகூரில் இந்திய தூதரிடம் அபிநந்தன் முதலில் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வருகையில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு சரியாக 9 மணிக்கு அவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் வாகா எல்லைக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு இந்திய அதிகாரிகளிடம் கையொப்பங்கள் வாங்கப்பட்டு சற்று நேரத்துக்கு முன்னர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை முதலே வாகா எல்லையில் பொதுமக்கள் தேசிய கொடிகள் ஏந்தி அபி நந்தனை வரவேற்ககக் காத்திருந்தனர். அபிநந்தனை வாகா எல்லையில் இந்திய விமானப் படை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதுகுறித்து பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன், ``விங் கமாண்டர் அபிநந்தன், முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான முறையில் மருத்துவப்பரிசோதனை நடத்தப்படும்" என்றனர்.