தென்சென்னை, திண்டுக்கல், கரூர்... உதயநிதி ஸ்டாலினை லோக்சபா தேர்தலில் களம் இறக்க ஆழம் பார்க்கிறதா திமுக?
லோக்சபா தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை களம் இறக்குவது தொடர்பாக தீவிர ஆலோசனைகளில் அவரது தரப்பு இறங்கியிருக்கிறது.
திடீரென அரசியலுக்கு வந்த நடிகர் உதயநிதி, அண்மைக்காலமாக திமுகவின் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றார். திமுகவைப் பொறுத்தவரையில் டெல்லியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன்தான் என முடிவாகிவிட்டது.
இதை விரும்பாமலும் விரும்பியுமாக கனிமொழி இருந்து வருகிறார். இந்த நிலையில் தென்சென்னை லோக்சபா தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இது உதயநிதிக்காக ஆழம் பார்க்கும் நடவடிக்கை என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. மேலும் திமுக சற்று தொய்வாக இருக்கக் கூடிய லோக்சபா தொகுதிகளில் உதயநிதி போன்ற ஸ்டார் வேட்பாளர்களை நிறுத்தலாமா? என்கிற ஆலோசனையிலும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்சென்னை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளின் களநிலவரம் என்ன? அங்கே உதயநிதி போன்ற பிரபலங்களை நிறுத்தினால் வெற்றி கிடைக்குமா? என்பதுதான் இந்த ஆலோசனையின் சாராம்சம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.