அரசாள்பவர் கேட்டிருந்தால் நிவாரணம் சொல்லி இருக்கலாம் - மீண்டும் தாக்கிய கமல்ஹாசன்
முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே என்று நடிகர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. கணிசமான கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், பல இடங்களில் பொதுமக்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..முன்னதாக, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின்போது, அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் அதுபற்றி வாய் திறக்காமல் நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்டும் விழாவில் கலந்துகொண்டனர் என்று கடுமையான விமர்சனம் எழுந்தது.
அதேபோல், தற்போது தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது குறித்து இதுவரை கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தததால், அவர்கள் மேல் விமர்சன கணை தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே!" என பதிவு செய்துள்ளார்.