ஆஸி.க்கு எதிரான ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பம் - உலகக் கோப்பையில் இடம் பெற இந்திய வீரர்களுக்கு அக்னிப்பரீட்சை!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முந்தைய ஒரு நாள் தொடர் என்பதால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற இந்திய அணி வீரர்களுக்கு இந்தத் தொடர் அக்னிப்பரீட்சையாக அமைந்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் வரும் மே 30-ந் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தற்போது ஆஸ்திரேலியாவுடன் ஒரு நாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இத்தொடருக்குப் பின் 75 நாட்களுக்கு எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் இந்தியா விளையாடாது.
இந்நிலையில் ஐதராபாத்தில் இன்று பிற்பகல் நடைபெறும் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு போட்டிகளிலும் சென்று சாதனை படைத்த தெம்புடன் ஆஸ்திரேலியா களம் காண்கிறது. இந்திய அணி சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும் இத்தொடரில் சாதித்தால் தான் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க முடியும் என்பதால் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு அக்னிப் பரீட்சை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.