அபிநந்தன் விடுவிப்பில் தாமதம் காரணம் அந்த வீடியோவா? - பாகிஸ்தானை சுற்றும் புதிய சர்ச்சை!

72 மணி நேர பாகிஸ்தான் சிறைவாசத்துக்கு பிறகு நேற்று தாய் மண் திரும்பினார் விமானி அபிநந்தன். பாகிஸ்தான் அதிகாரிகள் சூழ, மிடுக்கான உடை மற்றும் கம்பீர உடையுடன் அவர் இந்திய அதிகாரிகளிடம் சரியாக 9 மணி அளவில் வாகாவின் அட்டாரி எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நாடு திரும்பியதை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தற்போது அவருக்கு ராணுவம் சார்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்பின் அவர் குறித்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. முன்னதாக விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்த போது நடந்த சம்பவம் தற்போது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அபிநந்தனை மாலை 5 அல்லது 6 மணிக்கெல்லாம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் ஒப்படைக்கப்படவில்லை. பின்னர் சரியாக 9 மணி அளவில் வாகாவின் அட்டாரி எல்லையில் அவர் ஒப்படைக்கப்பட்டார். ஆனால் அவர் ஒப்படைக்கப்படுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக அவர் பேசிய வீடியோ ஒன்று பாகிஸ்தான் ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வைரலானது. அதே வீடியோ சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. முதல் வீடியோவில் பேசியது போலவே இதிலும் தான் எப்படி கீழே விழுந்தேன். கிராம மக்கள் என்ன செய்தார்கள். ராணுவத்தினர் எப்படி மீட்டர்கள், அவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது குறித்து இதிலும் பேசியிருந்தார். அதிலும் குறிப்பாக ராணுவத்தினரை புகழ்ந்து பேசும் காட்சிகள் மட்டுமே அந்த வீடியோவில் அதிகமாக இருந்தது.

ஆனால் முதல் வீடியோவை போல் இல்லாமல் இந்த வீடியோ பல இடங்களில் எடிட் செய்யப்பட்டிருந்தது. இது தான் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அபிநந்தன் பேசியவை அனைத்தும் எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 19-க்கும் அதிகமான கட்டுகள் இருப்பதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவரை கட்டாயப்படுத்தி, இந்த வீடியோ எடுக்கப்பட்டதா, இந்த வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க , தாமதம் ஏற்பட்டதா என சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்த சர்ச்சைகள் பூதாகரமாக வெடிக்க தற்போது அந்த வீடியோ தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து டெலிட் செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.

More News >>