அமெரிக்காவில் கடும் நிலநடுக்கம் - ஆபத்தான சுனாமி அலைகளுக்கு சாத்தியம் என எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் கடற்கரை பகுதிகளில் 7.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய், கனடா மற்றும் அமெரிக்கா மேற்கு கடற்கரை ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கொடியாக் நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட அந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் 12.31 மணிக்கு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரையோரத்தில் வாழும் மக்களுக்கு "உயிர் மற்றும் உடைமைகளுக்கு அளவுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம்" என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளில் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் ஆரம்பநிலை அளவீடுகளின்படி, "மிகவும் பரவலான தாக்கம் நிறைந்த, ஆபத்தான சுனாமி அலைகள் வரும் சாத்தியம் உள்ளது" என்று என்.டபிள்யூ.எஸ் பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.