அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார்? - வெளியானது தகவல்கள்
72 மணி நேர பாகிஸ்தான் சிறைவாசத்துக்கு பிறகு நேற்று தாய் மண்ணில் காலடி வைத்துள்ளார் விமானி அபிநந்தன். பாகிஸ்தான் அதிகாரிகள் சூழ, மிடுக்கான உடை மற்றும் கம்பீர உடையுடன் அவர் இந்திய அதிகாரிகளிடம் சரியாக 9 மணி அளவில் வாகாவின் அட்டாரி எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நாடு திரும்பியதை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தற்போது அவருக்கு ராணுவம் சார்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று மாலை 5 அல்லது 6 மணிக்கெல்லாம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில் இரவு 9 மணிக்கு தான் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக அவரை ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் இரண்டு பேர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெண் அதிகாரி. அபிநந்தனுடன் சேர்ந்து அந்த பெண் அதிகாரியின் புகைப்படமும் வைரலானது. அப்போது அந்த பெண் அதிகாரியை இங்குள்ளவர்கள் சிலர் அபிநந்தனின் மனைவி எனக் கூற ஆரம்பித்தனர். தற்போது அவர் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதன்படி, அந்த பெண் அதிகாரியின் பெயர் டாக்டர். ஃபரிஹா புக்தி.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு இந்தியா தொடர்பான பணிகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிறைப்பட்டிருக்கும் முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கை இவர் தான் கவனித்து வருகிறார். அந்த அடிப்படையில் தான் அபிநந்தனை ஒப்படைக்க அவர் வாகா எல்லைக்கு வந்துள்ளார்.