`பெண் கேட்டும் கொடுக்கவில்லை - விதவை பெண்ணை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற டிரைவர்!

கிண்டி நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ரேவதி. கணவர் இறந்துவிட்டதால் மகள் ஜீவிதாவுடன் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த வருடம் தனது மகள் ஜீவிதாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார் ரேவதி. அதன்படி ஜீவிதாவிற்கும், வினோத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளை வினோத் கார் டிரைவராக பணி புரிந்து வந்தாக கூறப்படுகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில நாட்களில் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என திருமணத்தை நிறுத்தியுள்ளார் ரேவதி.

இதனால் மீண்டும் ரேவதியிடம் பெண் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார் வினோத். ஆனால் அவருக்கு பெண் கொடுக்கமுடியாது எனக் கூறி மறுத்துவிட்டார் ரேவதி. இதற்கிடையே, நேற்று இது தொடர்பாக ரேவதி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவருக்கும், வினோத்துக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன் நண்பர்களுடன் வினோத் கத்தியால் வெட்டியதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் வினோத்.

சம்பவம் குறித்து அறிந்து வந்த கிண்டி போலீஸார் ரேவதியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய வினோத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். கொலை சம்பவத்தை கண்டித்து ரேவதியின் உறவினர்கள் நேற்று கிண்டி போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். வினோத் மீது பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் தான் அவர் கொலை செய்துள்ளார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

More News >>