ராமதாஸுக்காகத்தான் தி.மு.க கூட்டணி! பழைய பகையை மறக்காத பாரிவேந்தர்!!
திமுக கூட்டணிக்குள் ஐஜேகே செல்வது உறுதியாகிவிட்டது. இதற்காக அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேச வந்திருக்கிறார் பாரிவேந்தர்.
இந்த திடீர் முடிவு குறித்துப் பேசும் அக்கட்சி பொறுப்பாளர்கள், அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்த நாளில் இருந்தே, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தார் பாரிவேந்தர்.
திமுகவா...தினகரன் கூட்டணியா எனப் பல்வேறு ஆலோசனைகள் நடந்து வந்தன. பாமக மீது கோபத்தைக் காட்டுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.
வேந்தர் மூவிஸ் மதன் தொடர்புடைய மருத்துவ சீட் முறைகேடு வழக்கில் பாரிவேந்தர் மீது வழக்குகள் பாய்ந்தன. சட்டரீதியான தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்.
இதன் பின்னணியில் முழுமையாக வேலை பார்த்தது பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அந்தநேரத்தில் பாரிவேந்தரை விமர்சித்துக் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டார்.
அந்தக் காயத்தை பாரிவேந்தர் இன்னமும் மறக்கவில்லை. அதிமுக கூட்டணியில் செல்வாக்கில்லாத ராமதாஸுக்கு 7 சீட்டுகளும் ராஜ்யசபா இடங்களும் ஒதுக்கப்பட்டதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவேதான் திமுக கூட்டணியை அவர் தேர்வு செய்தார். வடமாவட்டங்களில் பாமகவை வீழ்த்துவதற்கு பெரும் செலவுகளைச் செய்யவும் அவர் தயாராக இருக்கிறார். இதனையறிந்து பாரிவேந்தரை தன்பக்கம் அழைத்துக் கொண்டார் ஸ்டாலின்' என்கிறார்கள்.
-அருள் திலீபன்