பிடிவாதத்தை தளர்த்திய கெஜ்ரிவால் - டெல்லியில் காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணிப் பேச்சு!
மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தற்போது காங்கிரசுடன் கூட்டணி சேர சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 பொதுத் தேர்தலில் டெல்லியில் மொத்தமுள்ள 7 லோக்சபா தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அதன் பின் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது ஆம் ஆத்மி கட்சி .
இதனால் தற்போது நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டி என கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்திருந்தார். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் பாஜகவுக்கு சாதகமாகும் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியானது.
இதனால் பாஜகவை வீழ்த்த காங்கிரசும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி முயற்சிகள் மேற்கொள்ள, தற்போது கெஜ்ரிவால் சம்மதித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 3 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் பிரபலம் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற திட்டத்துடன் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது