பினிசிங் மன்னன் என மீண்டும் நிரூபித்த தோனி - ஐதராபாத் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பினிசிங் மன்னன் என்பதை தோனி மீண்டும் நிரூபிக்க, உடன் கேதார் ஜாதவ் விளாச இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா உடனான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் ரன் எடுக்க திணறிய ஆஸி வீரர்கள் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தனர்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட இந்திய அணியில் தவான் டக் அவுட்டானார். ரோகித் சர்மா (37) கோஹ்லி (44) ஜோடி ஓரளவுக்கு கைகொடுத்தனர். இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, அடுத்து வந்த அம்பதி ராயுடுவும் 13 ரன்களில் நடையைக் கட்ட 23.3 ஓவரில் 99 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இந்தியா இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதன் பின் தோனியுடன் கைகோர்த்த கேதார் ஜாதவ் அபார திறமையை வெளிப்படுத்தினார். ஜாதவை விளாச விட்டு தோனி நிதான ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று ஆடி வெற்றியை உறுதி செய்தது. 49 ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரிகள் விளாசி பினிசிங் மன்னன் பட்டத்தை தட்டிச் சென்றார் தோனி .

இறுதியில் 48.2 ஓவரில் 240 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. தோனி 59 ரன்களுடனும், கேதார் ஜாதவ் 81 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது.

இந்தப் போட்டியில் 81 ரன்கள் விளாசிய ஜாதவ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 5 போட்டித் தொடரில் முதல் வெற்றியை ருசித்த இந்தியா தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

More News >>