ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தில் விதிமீறல்கள் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ 2000 என்று அறிவித்துவிட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வழங்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் அமைப்புசாரா ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ .2000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கான கணக்கெடுப்பு பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்து நாளை முதல் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்தத் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடந்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.4 லட்சம் கோடி கடனில் தமிழக அரசு தத்தளிக்கும் போது தேர்தலுக்காக ஏழை குடும்பங்களுக்டு ௹.2000 என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் இதில் பயன் பெறுவதோ ஆளும் கட்சிக்கு ஆதரவான வசதி படைத்தவர்கள் தான்.

இந்த விதிமீறல்கள் குறித்த தகவல்கள் ஆதாரத்தோடு வெளிவருகின்றன. ஆளும் கட்சிக்காரர்களின் பையை நிரப்ப ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதா? என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

More News >>