கட்டணம் ரொம்ப கூடுதல்!தேஜஸ் சொகுசு ரயிலில் கூட்டம் குறைவு!
சென்னை - மதுரை இடையே புதிதாக தொடங்கப்பட்டுள்ள தேஜஸ் சொகுசு அதிவிரைவு ரயிலில் கட்டணம் அதிகம் என்பதால் முதல் நாள் பயணித்தில் 30 சதவீதம் பேரே பயணம் செய்தனர்.
சென்னை - மதுரை இடையே தேஜஸ் சொகுசு ரயில் திட்டத்தை கடந்த 28-ந் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் பயணிகள் போக்குவரத்துக்காக நேற்று முதல் முறையாக இயக்கப் பட்டது.சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அதிநவீன சொகுசு வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரயிலில் 12 ஏ.சி.பெட்டிகளும், ஒரு உயர் வகுப்பு ஏ.சி. பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை இடையே 110 கி.மீ. வேகத்தில் ஆறரை மணி நேரத்தில் செல்லும் இந்த ரயிலில் கட்டணம் 895 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. உயர் வகுப்பு ஏ.சி கட்டணம் 1940 ரூபாய். அத்துடன் உணவுக் கட்டணமாக ரூ. 200 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 992 பேர் பயணிக்கும் வசதியுள்ள இந்த ரயிலில் முதல் நாள் பயணத்தில் 300 பேர் மட்டுமே பயணித்தனர். கட்டணம் கூடுதல் என்பதால் பயணிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்பட்டாலும், வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.