பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல்?- மதிமுகவுக்கு பம்பரமும் சந்தேகம்!

வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில் அதிமுக, திமுக, தேமுதிகவும் தேசிய கட்சிகள் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகள் அவரவர் சின்னத்தில் போட்டியிட எந்தத் தடையும் இல்லை.

மற்ற மாநில கட்சிகளுக்கு கடந்த தேர்தலின் போது பெற்ற வாக்குகளின் அடிப்படையிலேயே வரும் தேர்தல்களிலும் அக்கட்சிக்கான சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப் படுவது வழக்கம். அதாவது கடைசியாக நடைபெற்ற மக்களவை, சட்டசபைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 6 சதவீதமோ அல்லது 2 தொகுதிகளில் வெற்றியோ பெற்றிருக்க வேண்டும். இதனால் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதம் பெற்ற பாமக, மதிமுக கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ளன.

எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் ஒதுக்கப்படுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு முறையிட்டால் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவெடுக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

More News >>