கூட்டணிக்கு ஜவ்வாக இழுக்கும் தேமுதிக ..! 5-ந்தேதி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!
அதிமுகவுடனான கூட்டணிப் பேரத்தை ஜவ்வாக இழுத்து வரும் தேமுதிக, 5-ந் தேதி கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அதன் பின்னரே கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. தேமுதிகவின் பேரத்தில் மிரண்டு போன திமுக கூட்டணிக் கதவை சாத்திவிட்டது.
இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக சேரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டாலும் இன்னும் பேரம் படியவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் 5+1 தொகுதிகளுக்கு தேமுதிக சம்மதித்து விட்டதாகவும், ஆனால் மீண்டும் பாமகவுக்கு சமமாக தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டு பிடிவாதம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி வரும் 6-ந் தேதி சென்னையில் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி இறுதி அறிவிப்பை வெளியிட்டு விட அதிமுக, பாஜக தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதனால் அதற்குள் முடிவை அறிவிக்க விஜயகாந்துக்கும் நெருக்கடி கொடுக்க தற்போது கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியுள்ளார்.
வரும் 5-ந் தேதி காலை 10.30 மணிக்கு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணிச் செயலாளர்களுடன் விஜயகாந்த் கருத்துக்களை கேட்க இருப்பதாகத் தெரிகிறது. இதனால் இந்தக் கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.