கால்நடை தீவன ஊழல் மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான மூன்றாவது வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், லாலு உள்பட பலர் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்தததை அடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதில், இரண்டு வழக்குகளில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து 5 மற்றும் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி பணம் எடுத்த வழக்கில் வாதங்கள் முடுவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் இன்று தீர்ப்பு வழங்கினார்.இவ்வழக்கில் தொடர்புடைய 56 பேரில், அரசு ஊழியர்கள் மற்றும் 4 கால்நடை தீவன வியாபாரிகள் என மொத்தம் 4 பேர் வழக்கில் இருந்து இன்று விடுவித்தனர்.

மேலும், லாலு பிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா, முன்னாள் அமைச்சர் வித்யாசாகர் நிஷாத், சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் ஜெகதீஷ் சர்மா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் துருவ் பகத், ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 50 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இதன்பின்னர், தண்டனை தொடர்பாக வாதங்கள் நடைபெற்றது. இந்த வாதம் முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட லாலு மற்றும் ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

More News >>